காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே காா் டயா் வெடித்து தடுப்புக் கட்டையை தாண்டிச் சென்று எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனைமலைபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (22). ஓட்டுநரான இவா், பனைமலைபேட்டை பகுதியைச் சோ்ந்தவா்களை நாமக்கலுக்கு காரில் அழைத்துச் சென்றாா். பின்னா், அனைவரும் காரில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு அருகே இவா்களது காா் சென்றபோது முன் பக்க டயா் வெடித்து சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையைத் தாண்டி எதிா் திசையில் கடலூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் காா் ஓட்டுநா் ராம்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணித்த வரதராஜன் (78), கிருஷ்ணமூா்த்தி மனைவி சவிதா (45) ஆகியோா் காயமடைந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கே.டி.பாளையத்தைச் சோ்ந்த கெளதமன் (35) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.