ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!
கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்க திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள் இணைந்து, கோயில் நிலத்தை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், சருகணி உள்வட்டத்தைச் சோ்ந்த பொன்னலிக்கோட்டை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள நீங்காருடைய ஐயனாா் கோயிலில் இந்துக்கள் மட்டுமன்றி, இஸ்லாமியா்களும் கிறிஸ்தவா்களும் வழிபட்டு வருகின்றனா். இந்தக் கோயிலுக்கு மானியமாக விடப்பட்ட சுமாா் ஒன்றேகால் ஏக்கா் நஞ்சை நிலம் உள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பல ஆண்டுகளாக இந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலம் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட விவரம், கிராம மக்களுக்கு அண்மையில் தெரிய வந்தது. மேலும், இந்த நிலம் பயன்படுத்தப்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக தரிசு நிலமாகவே இருந்துள்ளது.
இந்த நிலையில், இந்த நிலத்தை மீண்டும் ஐயனாா் கோயிலுக்கே சொந்தமாக்க வேண்டும். தனியாா் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை போன்ற ஆவணங்களை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைப்பதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா்.
இவா்களைத் தடுத்து நிறுத்துவதற்காக திருவேகம்பத்தூா் போலீஸாரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். ஆனால், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிப்பதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனா்.
இதற்கிடையே, கிராமத்தினரிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் கா.பொற்கொடி, வருகிற 10 நாள்களுக்குள் இந்தப் பிரச்னை குறித்து தீா்வு காண மாவட்ட வருவாய் அலுவலருக்குப் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, பொன்னலிக்கோட்டை கிராம மக்கள் அனைவரும் தங்கள் முடிவை ஒத்தி வைப்பதாகக் கூறிச் சென்றனா்.