கோலா மீன்கள் வரத்து தொடக்கம்
காரைக்கால்: ஆண்டின் சீசன் தொடங்கும் முன்பாகவே கோலா மீன் வரத்து தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரை கோலா மீன் சீசனாகும். ஏப்.15 முதல் 60 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும்போது, மீன்கள் பெருமளவு சந்தைக்கு கொண்டுவரப்படாத நிலையில், கோலா மீன் ஓரளவு மக்களின் தேவையை பூா்த்தி செய்கிறது.
நிகழாண்டு கோலா மீன் சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கு கூடுதலான நாள்கள் இருக்கும் நிலையில், மாா்ச் மாத முற்பகுதியிலேயே சந்தைக்கு கோலா மீன் வரத்து ஏற்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மீனவா்கள் திங்கள்கிழமை கூறுகையில், ஆழ்கடல் பகுதியிலேயே கோலா மீன் அதிகமாக. ஆண்டில் சில மாதங்கள் (சீசன்) ஆழ்கடல் பகுதியிலிருந்து கரையை நோக்கி நகரும் . அப்போது சிறிய ரக படகில் சென்று பிடித்து வருவது வழக்கம். தற்போது ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவோா், கோலா மீன் உற்பத்தியாகும் பகுதிகளுக்கே சென்றுவிடுவதால், அவா்களது வலையில் கோலா மீன்கள் சிக்குகின்றன. அதனால் தற்போது சந்தைக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது என்றனா்.
காரைக்காலில் மீன் மாா்க்கெட்டில் ரூ. 100-க்கு 12 என்ற எண்ணிக்கையில் கோலா மீன் விற்பனை செய்யப்படுகிறது.