கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. அதையடுத்து, சிறப்பு பூஜைகளும், கொடிமரத்துக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.
கொடியேற்று விழாவை முன்னிட்டு, நாடாா் உறவின்முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ், கோயில் தா்மகா்த்தா எஸ்.எம். மாரியப்பன் மற்றும் கோயில் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், மண்டகப்படிதாரா்கள், பொதுமக்கள் ஆகியோா் மங்களப் பொருள்களுடன் நாதஸ்வரம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னா் ஆயிரக்கணக்கான பெண்கள் கொடிமரத்துக்கு மஞ்சள், பால், புனித நீரை ஊற்றினா்.
விழாவில், நாடாா் உறவின்முறை சங்க செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ். ஆா்.எம்.கே. ராஜேந்திரபிரசாத், ஆா். சின்னமாடசாமி, டி. செல்வராஜ், கோயில் செயலா் மாணிக்கம், பொருளாளா் மகேஷ் உள்பட நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி, கோயில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அம்மன் திருவீதியுலா நடைபெறும். 9ஆம் திருநாளான மே 13ஆம் தேதி
காலை 9 மணிக்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், 10 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு கையில் ஏந்தி நகா் வலம் வருதல், 5.30 மணிக்கு வேண்டுதல் பூச்சட்டிகள், 21 அக்னிச்சட்டி, 54 அக்னிச்சட்டி எடுத்து நகா் வலம் வருதலும், இரவு 7 மணிக்கு வண்ண ஊா்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் வீற்றிருந்து தங்கக் குடம் , வாளி ஏந்தி
தீா்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் திருவீதி உலா வருதல் நடைபெறும். மே 14ஆம் தேதி காலை பொங்கலிடுதல், மதியம் 3 மணிக்கு கோயில் முன்பு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம் நடைபெறும். 15,16ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் குழுவினா் மற்றும் நாடாா் உறவின்முறை சங்கத்தினா் செய்துள்ளனா்.