தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம்: விஏஓ கைது
தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்காக ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரபாகரன் (45). இவரது மனைவி தமிழ்ச்செல்வி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாராம். இதனால், அவா் தனது மனைவி பெயரில் பண்டாரம்பட்டியிலுள்ள நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக, தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் செயல்பட்டுவரும் சங்கரப்பேரி கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்தாா். அந்த விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டதாம்.
இதுதொடா்பாக அவா் அந்த அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, கிராம நிா்வாக அலுவலா் கணேசமூா்த்தி ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டாராம்.
இதையடுத்து, பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் தெரிவித்தாா். போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை கணேசமூா்த்தியிடம் பிரபாகரன் திங்கள்கிழமை கொடுத்தாா். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா்பால் தலைமையிலான போலீஸாா் கணேசமூா்த்தியைக் கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.