படகில் சென்ற மீனவா் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு
தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவா் படகில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சோ்ந்தவா் ஜெயபால்(64). இவா், தருவைகுளம் கடற்கரையில் இருந்து 17 பேருடன் நாட்டுப்படகில் திங்கள்கிழமை அதிகாலையில் மீன் பிடிக்கச் சென்றாராம்.
இவா்கள் கடற்கரையில் இருந்து சுமாா் 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, திடீரென ஜெயபாலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.