கோவை: `பீப் போடக்கூடாது' - தள்ளுவண்டி கடை தம்பதியை மிரட்டிய பாஜக பிரமுகர்
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி ஆபிதா. இந்த தம்பதி கடந்த சில நாள்களாக சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வருகிறார்கள்.
இவர்களின் கடைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பாஜக ஓபிசி அணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி சென்றுள்ளார். அப்போது அவர், “பீப் பிரியாணி ஆகாது. எந்தக் கடை வேண்டுமானாலும் போட்டுக்கோ. ஆனா பீப் போடாதே.” என்று கூறினார்.
அதற்கு ரவி – ஆபிதா தம்பதி, “எங்களுக்கு தெரிந்த தொழிலை நாங்க செய்யறோம். அப்படின்னா மீன் கடைல இருந்து எல்லாத்தையும் எடுக்கச் சொல்லுங்க. எங்களை இது பண்ணாதனு சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்ல.” என்று கூறினர். அதை ஏற்காத சுப்பிரமணி, “சொல்லிட்டே இருக்கேன். மறுபடியும் மறுபடியும் பண்ணா என்ன அர்த்தம்.” என்று மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் பகுதி கோவை மாநகராட்சியின் 12 வது வார்டில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமமூர்த்தி என்பவர் கவுன்சிலராக உள்ளார். “கம்யூனிஸ்ட் கவுன்சிலராக உள்ள வார்டிலேயே இந்த நிலையா.. அது உடையாம்பாளையமா இல்லை உத்தரப்பிரதேசமா.” என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து ரவி மற்றும் ஆபிதா கூறுகையில், “நாங்கள் கிறிஸ்துமஸ் அன்று கடை போட்டோம். அப்போதே பாலசுப்பிரமணி வந்து, ‘கடை போடக் கூடாது’ என மிரட்டினார். வாழ்வாதாரத்துக்காக ரூ.50,000 கடன் வாங்கி இந்தத் தொழிலை தொடங்கியுள்ளோம். கவுன்சிலர் உள்ளிட்டோரிடம் அனுமதியும் வாங்கியுள்ளோம். அதனால் கடையை தொடர்ந்து நடத்தினோம். இதையடுத்து ஆள்களை அழைத்து வந்து மிரட்டினார்கள். அதனால் கடைக்கு யாருமே வராமல் நஷ்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாக கடையே வேறு பகுதிக்கு மாற்றிவிட்டோம். இப்போதும் கடை போடக்கூடாது என மிரட்டுகிறார்கள். விருப்பப்பட்ட உணவை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதில் சிலர் சாதி மதம் பிரிவனைவாதத்துடன் செயல்படுகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.” என்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பாலசுப்பிரமணி, “ஊர் கட்டுப்பாடு என்பதால் பீப் கடை போடக் கூடாது.” என்று அவர்களிடம் கூறியதாக விளக்கமளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பான நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு தரப்பினரிடையும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“இதுகுறித்து தற்போதுவரை காவல்துறைக்கு யாரும் புகாரளிக்கவில்லை. எனவே மேற்கொண்டு வியாபாரிகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.