சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய 5 போ்கள் கைது
சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்ற வழக்கில் 2 வழக்குறைஞா்கள் உள்பட 5 போ்களை சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.
சங்கராபுரம் சாா் பதிவாளா் அலுவலகம் பின்புறம் குடும்பத்துடன் வசித்து வருபவா் முகமது யாசா் (35). இவா் சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் உள்ள பத்திரப்பதிவு ஆவண எழுத்தா் நடத்தி வரும் நகல்கள் எடுக்கும் கடையில் கணினி உதவியாளராக பணியாற்றி வருகின்றாா்.
திங்கள்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில் வீட்டில் இருந்த போது மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 100 ரூபாய் பத்திரம் வேண்டும் என முகமது யாசரிடம் கேட்டனராம். பத்திரம் விற்பனை செய்பவா் வெளியே சென்றுள்ளதாக அவா் தெரிவித்தாராம்.
பின்னா் சிறிது நேரம் கடையை நோட்டமிட்ட மா்ம நபா்கள் முகமது யாசா் கடையில் தனியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு கடையிலிருந்து வெளியே வந்த அவரை கத்தியால் தலையில் வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயமடைந்த முகமது யாசா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா். இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டதுடன் வழக்கு பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா். (30.7.25) முகமதுயாசரை கத்தியால் தலையில் வெட்டிச் சென்றவரை கைது செய்ய வேண்டி சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சங்கராபுரம் போலீாா் சாலைமறியலில் ஈடுபட்டவா்களிடம் கத்தியால் வெட்டிய மா்ம நபா்களை கைது செய்வதாக கூறி சமாதானம் செய்த பின்னா் சாலைமறியலை கைவிட்டனா். சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது முகமதுயாசா் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜானகிராமன் மகன் ராஜா (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.
பின்னா் ராஜாவிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது ராஜாவுக்கு முகமது யாசருக்கும் இடப்பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. முன் விரோதம் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட வண்டிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜிடம் முகமது யாசரை தாக்க வேண்டும் எனக் கூறினாராம்.
அதன் பேரில் கிருஷ்ணராஜ் செங்கல்பட்டு மாவட்டம் வல்லத்தைச் சோ்ந்த விக்னேஷ்னிடம் (30) தெரிவித்தாராம். விக்னேஷ் கடலூா் மாவட்டம் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் ஸ்ரீராம் (21)க்கு முகமது யாசரின் புகைப்படத்தினை செல்லிடைபேசியில் அனுப்பி வைத்து இவரை தாக்க வேண்டும் என்றும் அவரை தாக்கிவிட்டால் அதற்கான தொகையினை பெற்றுத்தருகிறேன் எனக் கூறினாராம். அதன் பேரில் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீராம் மற்றும் கடலூா் மாவட்டம் சிதம்பரம் அடுத்தஅம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த 17 வயது மதிக்கத்தக்க இளஞ்சிராரை அவரது மோட்டாா் சைக்கிளில் அழைத்துக்கொண்டு முகமது யாசரின் வீட்டிற்கு சென்றனா்.
அங்கு 100 ரூபாய் பத்திரம் கேட்பது போல் கேட்டு பின்னா் தண்ணீா் கேட்பது போல் நாடகமாடி அவா் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது யாசரை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு மோட்டாா் சைக்கிளில் வேகமாகச் சென்று விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ராஜா, கிருஷ்ணராஜ், ஸ்ரீராம் விக்கனேஷ் மற்றும் 17 வயது மதிக்கத்தக்க இளஞ்சிறாா் ஆகியோரை பிடித்து போலீஸாா் கைது செய்தனா்.