சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீட்டு மனு!
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று(ஜன. 24) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கடந்த ஆக. 9 ஆம் தேதி பணியில் இருந்த 31 வயது மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. அப்போது, கொலை சம்பவம் தொடா்பான ஆதாரத்தை சேதப்படுத்தியதாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தி, மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
இதையும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி
இந்நிலையில் இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியால்டா நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்த நிலையில் கடந்த திங்கள்கிழமை(ஜன. 20) தண்டனை விவரங்களை அறிவித்தது. குற்றவாளி சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாகவும் மேற்கு வங்க மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை போதாது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.
மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி 'இந்த வழக்கு எங்கள் அதிகார வரம்பிற்குள் இருந்திருந்தால், நாங்கள் முன்பே மரண தண்டனையை உறுதி செய்திருப்போம்' என்று கூறியுள்ளார்.
மேலும், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோரும், குற்றவாளிக்கு மரண தண்டனை வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ தரப்பிலும் 'இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காகக் கருதி குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' என்று கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என நீதிபதி எம்.டி. ஷப்பர் ரஷிடி அமர்விடம் சிபிஐ கூறியுள்ளது.
இதையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜ்தீப் மஜும்தார், குற்றவாளிக்கு தண்டனை போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வழக்கை விசாரித்த சிபிஐ-க்கு உரிமை உண்டு என்றார். இதையடுத்து சிபிஐ மேல்முறையீட்டு மனுவிற் தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் சிபிஐ கூறியுள்ளது.
எனினும் சிபிஐ, மேற்குவங்க அரசு தாக்கல் செய்த இரு மேல்முறையீட்டு வழக்குகளும் வருகிற ஜன. 27 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.