Bill Gates: விவாகரத்துக்கு பின் காதலி குறித்து மனம் திறந்த பில் கேட்ஸ் - யார் இந...
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!
சட்டவிரோதாமாக அமெரிக்காவுக்கு செல்வதற்காக ரூ. 60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா செல்வதற்காக வாங்கப்பட்ட கடனை எப்படி அடைப்பது என்ற கேள்வியுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் செய்வதறியாது இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முதல்கட்டமாக 104 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். இந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.
பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 104 பேர் இந்த விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்றது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு
ரூ. 40 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை கட்டணம்
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவரான பஞ்சாபை சேர்ந்த குர்ப்ரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில்,
“உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ. 45 லட்சம் கடன் வாங்கி அவரை 6 மாதத்துக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு அனுப்பினோம், கடனை அடைக்க முடியாமல் தற்போது வீட்டை இழந்துவிட்டோம்.
அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் உயிர் வாழ முடியும். இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.
அதேபோல், ஆகாஷ்தீப் சிங் என்ற இளைஞர் அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் அவரை செலவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கு அனுப்பியது யார்?
அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக இளைஞர்களிடம் ரூ. 60 லட்சம் வரை கட்டணமாக பெற்று சட்டவிரோதமாக அனுப்பிய முகவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கூறுகையில்,
“நாடு கடத்தப்பட்ட இளைஞர்களுடன் பேசினேன். பெரும்பாலானவர்கள் துபை பயண முகவர்கள் மூலம்தான் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். தொலைபேசி மூலம் முகவர்கள் பேசி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
முதலில் இளைஞர்கள் துபை அனுப்பப்பட்டு, அங்கிருந்து பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளனர். சிலருக்கு கனடா நாட்டின் விசாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, இளைஞர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பயண முகவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகின்றது.