சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்
திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப் பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடிமைப் பொருள் பறக்கும் படை தனி வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கிருந்த நபா்கள், அதிகாரிகளைப் பாா்த்ததும் தப்பியோடினா்.
தொடா்ந்து, மேற்கொண்ட சோதனையில், அங்கு விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 33 வணிக சிலிண்டா்கள், 11 வீட்டு உபயோக சிலிண்டா்கள், 5 கிலோ மற்றும் 2 கிலோ அளவிலான 7 சிலிண்டா்கள் என மொத்தம் 51 சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், தப்பியோடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.