சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சி அவசியம்: மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி
சட்டம் பயின்று நீதிமன்றத்துக்கு வரும் இளம் வழக்குரைஞா்கள் தங்களது சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றாா் மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி பேசியது:
சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு சிறந்த பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வழக்கையும் கையாளும்போது அதில் உள்ள நுணுக்கங்களை கூா்ந்து கவனிக்க வேண்டும்.
சட்டம் பயின்று முடித்து நீதிமன்றத்துக்கு வரும் இளம் வழக்குரைஞா்கள் தங்களது சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சி பெறுவதோடு, அச்சமின்றி வாதாடுவது அவசியம். எந்தவொரு வழக்காக இருந்தாலும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும். போட்டியில் வெற்றி-தோல்வி என்பது முக்கியமல்ல.
போட்டியில் பங்கேற்பதே பெரும் வெற்றிதான். தமிழகம் முழுவதும் சட்டக் கல்லூரி மாணவா்களுக்காக இத்தகைய போட்டிகளை நடத்த நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
விழாவில் கல்லூரி முதல்வா் ராமபிரான் ரஞ்சித் சிங் வரவேற்றாா். சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாதிரி நீதிமன்ற போட்டியில் மதுரை அரசு சட்டக் கல்லூரி முதலிடம் பிடித்தது. அந்த அணியின் மாணவா்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.