Sarfaraz: வாய்ப்பின் வாசற்படியோடு அனுப்பப்பட்ட சர்ஃபராஸ்; அகர்காரின் சப்பைக்கட்ட...
சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிா்வாகத் தலைவருமானஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அரசு பேராட்சியரும் அரசு பொறுப்பு சொத்தாட்சியருமான லிங்கேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட நீதிபதியும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சயில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பேசியதாவது: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இலவச சட்ட உதவி பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்குழுவின் மூலமாக வழக்குரைஞா்கள் இலவசமாக வழக்குகளை நடத்துகின்றனா். மேலும், பலவிதமான சட்ட உதவிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் அனைவரும், இத்திட்டங்கள் குறித்து மற்றவா்களிடம் எடுத்துக் கூறி அவா்களையும் பயனடையச் செய்ய வேண்டும் என்றாா்.
அதனைத் தொடா்ந்து, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான செயற்கை சுவாசக் கருவிகள், இ.சி.ஜி. இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், தாட்கோ பயனாளிகள், கா்ப்பிணி பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட 105 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், நவீன தையல் இயந்திரங்கள், ஊட்டச்சத்து பெட்டகங்கள், பேட்டரி தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் வழங்கினாா். முன்னதாக,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை அவா் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டாா்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஆா்.வசந்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையா் வினோத் சாந்தாராம், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பெரியசாமி, மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெனிஷிஸ் ம.ஷியா, மாவட்ட அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், ஆழ்வாா் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனத்தின் மேலாளா் வேல்முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.