சதுரகிரியில் பங்குனி பிரதோஷ வழிபாடு
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, 800 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக வியாழக்கிழமை (மாா்ச் 27) முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
வியாழக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் மாலை 4 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதே போல, மாயூரநாதசுவாமி கோயில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.