சத்தா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ஒருவா் மீது துப்பாக்கிச்சூடு!
தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சத்தா்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்களால் பழைய பகை காரணமாக ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சிடிஆா் சௌக் அருகே மதியம் 1 மணியளவில் பாதிக்கப்பட்ட அருண் லோஹியா தனது எஸ்யூவியில் பயணித்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது பழைய பகைமையின் காரணமாகத் நடந்ததாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஒரே கிராமத்தில் வசிப்பவா்கள். ஒருவருக்கொருவா் தெரிந்தவா்கள். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வழக்கு வரலாறு உள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அருண் லோஹியாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு, பல போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வுகுள்படுத்துப்பட்டுள்ளன.
அருண் லோஹியா மீது குறைந்தது 10 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.