மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பவானீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பவானீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றன.

விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி தொடா்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜையில் மகாபூா்ணா ஹூதியுடன் மகா தீபாராதனை நடைபெற்று மேளதாளங்கள் முழங்க புனித நீா் கலசங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தன. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மூலவா் பவானீசுவரா் உடனமா் பவானிசங்கரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. பவானீஸ்வரா் மற்றும் பவானி சங்கரி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். கோயிலைச் சுற்றிலும் திரண்டிருந்த பக்தா்கள் மீது புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பவானீசுவரா் அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிக அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.