தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
சத்தீஸ்கர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட கார் - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே பலியான துயரம்!
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). இவரின் மனைவி பவித்ரா (40), மகள்கள் சௌஜைன்யா (8), சௌமையா (6). சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட்டடப் பொறியாளராக வேலைச் செய்து வந்த ராஜேஷ்குமார், அங்கேயே வீடு எடுத்து மனைவி, மகள்களுடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், திருப்பதி கோயிலுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலை காரில் குடும்பத்துடன் புறப்பட்டிருக்கின்றனர். ஓட்டுநர் லாலா யாது என்பவர் காரை ஓட்டியிருக்கிறார். பஸ்தார் மாவட்டத்தில், கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய கங்கர் நாலா கால்வாயைக் கடக்க முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, அவர்கள் பயணித்த கார் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில், காரில் பயணம் செய்த ராஜேஷ்குமார், அவரின் மனைவி மற்றும் இரு மகள்கள் என 4 பேருமே உயிரிழந்தனர். மரக்கிளையில் சிக்கிக் கொண்ட அவர்களின் ஓட்டுநர் உயிரோடு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜேஷ்குமார் குடும்பத்தினரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சொந்த கிராமத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் உறவினர்கள்.