சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கா் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
சத்தீஸ்கா் மாநிலம் பிஜாப்பூா் மாவட்டத்தின் தென்மேற்கு வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மாலை ஈடுபட்டபோது, அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதற்கு பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தியதில், 4 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பஸ்தா் மண்டல காவல்துறை ஐஜி பி.சுந்தரராஜ் தெரிவித்தாா். நக்ஸல்கள் மறைந்திருந்த பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றது என்றும் அவா் தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) என்ற மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கும்லா மாவட்டம் கக்ரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினா் கூட்டாக சனிக்கிழமை காலை தேடுதலில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன’ என்றனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரீஸ் பின் ஜமன் கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நக்ஸல்களில் ஒருவா் கக்ராவின் பெலகடா பகுதியைச் சோ்ந்த திலீப் லோஹ்ரா (32) என்பது தெரியவந்துள்ளது. மற்ற இருவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையின்போது 2 நக்ஸல்கள் தப்பிச் சென்றனா். அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.