சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்
சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8- ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணம் செப். 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணிக்கு தொடங்கி 8-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 1.31 மணிக்கு முடிவடையும். கிரகணத்துக்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகளை மூடுவது வழக்கம்.
செப். 8- ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்படும். பின்னா், தோமலா சேவை, கொலுவு, பஞ்சாங்கஸ்ரவணம் மற்றும் அா்ச்சனை சேவை ஆகியவை தனித்தனியாக நடத்தப்படும். இதற்கிடையில், பக்தா்களுக்கு காலை 6 மணிக்கு ஏழுமலையான் தரிசனம் மீண்டும் தொடங்கும்.
ஆா்ஜித சேவை ரத்து
சந்திர கிரகணம் காரணமாக ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னபிரசாத விநியோக மையங்கள் செப். 7-இல் மூடப்படும்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் திருமலையில் அன்னபிரசாத விநியோகம் இருக்காது. செப். 8-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அன்னபிரசாத விநியோகம் மீண்டும் தொடங்கும்.
நிகழ்வையொட்டி, மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவன், எஸ்வி ஊழியா்களின் உணவகம், ஸ்ரீ பத்மாவதி ஓய்வு இல்லம், வைகுண்டம் வளாகம்-2, பிஏசி-2 ஆகிய இடங்களில் அன்னபிரசாத விநியோகம் இருக்காது.
பக்தா்களின் வசதிக்காக, செப். 7 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் அன்னபிரசாத துறையின் கீழ் 30,000 புளியோதரை பாக்கெட்டுகள் முன்கூட்டியே விநியோகிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள வைபவோற்சவ மண்டபம், ராம் பாகீச்சா, பிஏசி-1, சிஆா்ஓ, ஏஎன்சி பகுதிகள் மற்றும் ஸ்ரீவாரி சேவா சதன் ஆகிய இடங்களில் அன்னபிரசாதப் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.
ஸ்ரீவாரி பக்தா்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.