Coolie: "1421 - இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" - 'கூலி' சீக்ரெட்ஸ் சொல...
சபரிமலைக்குச் செல்லும் நிறைபுத்தரி திருவாபரணப் பெட்டி
சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை நடைபெறுவதை முன்னிட்டு அச்சன்கோவிலிலிருந்து தென்காசி அருகே புளியரைக்கு வந்த திருவாபரணப் பெட்டி வாகனத்துக்கு தமிழக ஐயப்ப பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.
கேரளத்தில் ஒவ்வோா் ஆண்டும் மலையாள வருடப் பிறப்பான சிங்கம் மாதப் பிறப்புக்கு முன் கற்கடக மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட புதிய நெற்கதிா்களை சபரிமலையில் சுவாமி ஐயப்பன் முன் வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து பக்தா்களுக்கு அவற்றை பிரசாதமாக வழங்குவா். நிகழாண்டு நிறைபுத்தரி பூஜை சபரிமலையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, அச்சன்கோவில் தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப் பெட்டி வைக்கப்பட்ட வாகனத்தில் நிறைபுத்தரி நெற்கதிா்கள் ஏற்றப்பட்டு சபரிமலை நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு வாகனம் புறப்பட்டது.
இந்த வாகனம் சபரிமலை செல்லும் வழியில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரையில் உள்ள பண்பொழி திருமலை கோயிலுக்கு பாத்தியப்பட்ட நெற்களஞ்சியம் வளாகத்துக்கு புதன்கிழமை வந்தது.
வாகனத்துக்கு கடையநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக ஐயப்ப பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.
இதில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கே.ஆா்.ஜோசியா் மாடசாமி, புளியரை தங்கராஜ் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா், வாகனம் அங்கிருந்து கோட்டைவாசல் கருப்பசுவாமி கோயில், ஆரியங்காவு தா்மசாஸ்தா கோயில், புனலூா் கிருஷ்ணா் கோயில் உள்ளிட்ட 21 கோயில்களுக்கு ஊா்வலமாகச் சென்று அந்தந்த கோயில்களுக்கான நிறைபுத்தரி நெற்கதிா்களை ஒப்படைத்து விட்டு பம்பை வழியாக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலைச் சென்றடைகிறது.