தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது
சாதிவாரிக் கணக்கெடுப்பு : `மு.க.ஸ்டாலின் தவற விட்ட வாய்ப்பு’ - தோழர் தியாகு | பகுதி 1
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’
இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.
எழுத்து : தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
சாதிவாரிக் கணக்கெடுப்பு: தமிழக அரசு செய்ய வேண்டியது!
நரேந்திர மோதி 2024-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்ற போதிலும், அவர் விரும்பிய அளவுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க முடிந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒப்பளவில் கூடுதலான இடங்களைக் கைப்பற்ற முடிந்தது என்பதால் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற கோரிக்கை அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாயிற்று.
ஆர்எஸ்எஸ் – ஜனசங்கம் – பாஜக அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டுக்கும், அதற்கு வழிசெய்யக் கூடிய சாதிவாரிக் கணக்கெடுப்புக்கும் எதிரானவை. 2024 பொதுத் தேர்தல் பரப்புரையிலும், அதற்குமுன் மேற்கொண்ட நடைப்பயணங்களிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற கோரிக்கையைப் பரவலாக எழுப்பியவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இந்தப் பரப்புரையை வன்மையாக எதிர்த்த நரேந்திர மோதி… ராகுல் காந்தியின் பேச்சு ’அர்பன் நக்சல் மனப்போக்கின்’ வெளிப்பாடே என்று சாடினார்.
ஆனால் காங்கிரசும் கூட சாதிவாரிக் கணக்கெடுப்பை முழுமையாக ஆதரிக்கக் கூடிய கட்சியன்று. தேர்தல் நலனை முன்னிறுத்தி இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் ஒப்புக்காவது ஆதரிக்கும் படி செய்வதில் ராகுல் காந்தி ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தக் கூடிய ஒரு கோரிக்கை இதுவென்று எல்லாத் தரப்புகளும் உணர்ந்துள்ளன.
சாதிவாரிக் கணக்கெடுப்பின் வரலாறு
இந்திய தேசியக் காங்கிரஸை விடவும், பாரதிய ஜனதா கட்சியை விடவும், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒரு பழைய வரலாறு உள்ளது. இந்தியா காலனி நாடாக இருந்த போது பிரித்தானியர் பொருளியல் சுரண்டலுக்காகவும் அரசியல் ஆதிக்கத்துக்காகவும் இந்தியச் சந்தையையும் சமூக அமைப்பையும் பயில வேண்டியும், தமது சமூக அடித்தளத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டியும் மக்கள்தொகைக் கணிப்பு (census) நடத்த முற்பட்டனர். இந்தியச் சமூகத்தில் சாதியின் முதன்மைப் பங்கை அறிந்திருந்த காரணத்தால் ’ஜனக்கணிதை’யுடன் சாதிக் கணக்கெடுப்பையும் சேர்த்து, சமூகப் பொருளியில் சாதிக் கணக்கெடுப்பு (SECC – Socio-Economic Caste Census) என்ற பெயரில் இதனைச் செயலாக்கினர்.
இவ்வாறான கணக்கெடுப்பு இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1871-ஆம் ஆண்டும், பிறகு 1931 வரை பத்தாண்டுக்கு ஒரு முறையும் நடந்தது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் ஆட்சியாளர்களின் திட்டங்களுக்குத் துணை செய்தது போலவே நிகர்மைக்கும் நீதிக்குமான ஒடுக்குண்ட மக்களின் குரல் உயர்வதற்கும் வெளிச்சமிட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்கி விட்டதால் 1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

கடைசியாக 1931ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, தாழ்த்தப்பட்ட வகுப்புகள் / தீண்டப்படாத மக்கள் தவிர்த்து இந்தியாவில் 4,147 சாதிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இந்திய மானுடவியல் ஆய்வு இந்தியாவில் 6,325 சாதிகளை அடையாளம் கண்டது. பெருஞ்சாதிகள், கிளைச்சாதிகள், உட்சாதிகள் என்ற சிக்கலான வலைப்பின்னலைக் கருத்தில் கொள்வோமானால் இதில் பெரிய முரண் ஒன்றுமில்லை. நால் வர்ணமும் நாலாயிரம் சாதிகளும் என்பது சற்றொப்ப சரியானதே.
வகுப்புரிமைத் தீர்ப்பு – புனே ஒப்பந்தம்
1882ஆம் ஆண்டிலேயே மகாத்மா ஜோதிராவ் புலேவும், வில்லியம் ஹண்டரும் சாதியடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பினார்கள். 1931 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு ஆட்சிப் பதவிகளில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை வலுப்பெற்றது. 1932ஆம் ஆண்டு பிரித்தானியத் தலைமையமைச்சர் ராம்சே மக்டொனால்டு வகுப்புரிமைத் தீர்ப்பை வழங்கினார். இதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களைத் தனி வகுப்பாகக் கருதுவதை எதிர்த்து எரவாடா சிறையில் காந்தியார் நடத்திய உண்ணா நோன்பும் அம்பேத்கருடன் புனே ஒப்பந்தம் ஏற்பட்டதும் வரலாறு.

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்று 1950இல் குடியரசு மலர்ந்த பிறகு 1951ஆம் ஆண்டு சமூகப் பொருளியல் சாதிக் கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். பண்டித ஜவகர்லால் தலைமையிலான ஒன்றிய அரசு அதைச் செய்யவில்லை. அது வெறும் மக்கள்தொகைக் கணிப்பை மட்டும் மேற்கொண்டது. சாதி வாரிக் கணக்கெடுப்பின் இன்றியமையாக் கூறு ஏனைய பிற்பட்ட (OBC) சாதிகளைக் கணக்கிடுவதுதான். அரசமைப்புச் சட்டப்படியான அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகளை மட்டும் கணக்கெடுப்பது முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆகாது.
மக்கள்தொகையில் சரிபாதிக்கு மேற்பட்டவர்களான ஏனைய பிற்பட்ட வகுப்புகளைக் கணக்கிடுவதும், அம்மக்களிடையிலான படிநிலைகளையும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய தரவுகளைத் திரட்டுவதும் அளவுவகையிலும் பண்புவகையிலும் கடினமான பணிகளே! ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்ய மறுத்தமைக்கு வேறு காரணங்கள் இருந்தன. சுதந்திர இந்தியாவில் ஆட்சியில் அமர்ந்தவர்கள் ’உயர்’ சாதிக்காரர்கள் என்பதால் அவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்யவில்லை என்று பெரியார் சொன்னார்.
ஏனைய பிற்பட்ட வகுப்பினர்க்கு நலத் திட்டங்கள் வகுக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 340ஐ ஜவகர்லால் நேரு மதிக்கவில்லை. ஒன்றிய அமைச்சரவையிலிருந்து 1951 செப்டம்பர் 27ஆம் நாள் அண்ணல் அம்பேத்கர் விலகிய போது அவர் சொன்ன 4 காரணங்களில் இதுவும் ஒன்று.
1953 ஜனவரி 29ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆணைப்படி, முதல் பிற்பட்ட வகுப்பினர் ஆணையம் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முதல் பரிந்துரையே சாதிவாரிக் கணக்கெடுப்புதான். ஆனால் ஒன்றிய அரசு அந்த ஆணைய அறிக்கையையே புறந்தள்ளி விட்டது. ஆளும்கட்சியில் மட்டுமல்லாமல் அதிகார வர்க்கத்திலும் நீதித் துறையிலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆற்றல்கள் வலுவாக இருந்த படியால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெறவே இல்லை.

சாதி பாராத சாதியம்
இந்தியச் சமூகத்தின் மையக் கூறுகளில் ஒன்றான சாதியைக் கண்டு கொள்ளாமல் விடுவதுதான், `உயர்’ சாதியினரின் நன்மைக்கு உதவும் உத்தியெனக் கொண்டனர். நிறம் பாராத இனவாதம் (colour blind racism) போல் இது சாதி பாராத சாதியம் (caste blind casteism) என்ற தெளிவு ஏற்படவில்லை. இன்றளவும் சாதியொழிப்பிலும் சாதிமறுப்பிலும் மெய்யாகவே ஈடுபாடு கொண்டவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கோருவதும், சாதி நிலைத்திருப்பதில் நல அக்கறை கொண்டவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து நிற்பதும் வாடிக்கையாக உள்ளன.
பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லையே, சாதி இல்லை என்ற பாசாங்கினால் சாதி ஒழிந்து விடாது. நோய் குணமாக வேண்டுமானால் முதலில் நோய்காணல் (diagnosis) செய்ய வேண்டும். சமூகத்தைப் பீடித்துள்ள சாதியம் களைந்திடவும் முதலில் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும்.
மண்டல் குழு
சாதிவாரிக் கணக்கெடுப்பே இல்லா விட்டாலும் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறையை அறவே மறைக்கவோ ஒடுக்குண்ட மக்களின் எழுச்சியை அடியோடு தடுக்கவோ முடியவில்லை. இதன் விளைவாக, சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்ட வகுப்புகளைக் கண்டறிந்து கைதூக்கி விடுவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க 1978ஆம் ஆண்டு மண்டல் குழு அமைக்கப்பட்டது.
முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பு மட்டும் நடந்திருக்குமானால் மண்டல் குழுவின் பணி இன்னும் பெரிய தாக்கம் கொண்டிருக்கும். அரசுத் துறைகள் வழங்கும் புள்ளிவிவரங்களையும், தற்சார்பான ஆய்வுகளையும், பகுதியளவான கணக்கெடுப்புகளையும் பயன்படுத்தியே மண்டல் குழுவின் பரிந்துரைகள் வகுக்கப்பட்டன. 1980களில் சமுதாயத்தில் ஏனைய பிற்பட்டோர் 52 விழுக்காடு என்று கணித்த மண்டல் குழு அவர்களுக்குக் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் 27 விழுக்காடு மட்டுமே பரிந்துரைக்க முடிந்தது.
வி.பி. சிங் பொறுப்பேற்று 1991இல் மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்கும் வரை அது கிடப்பில் போடப்பட்டதற்கும், பிறகும் கூட உச்ச நீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்பட்டதற்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாமையே முக்கியக் காரணமாயிற்று. மேதகு நீதியரசர்கள் “இதற்கு என்ன அவசரம்? உங்களிடம் சாதிகள் பற்றிய தரவுகள் உண்டா?” என்று அலட்சியமாகக் கேட்டு சமூக நீதியின் முகத்தில் அறைந்தனர்.

2011 சாதிவாரிக் கணக்கெடுப்பு
புதுத் தாராளியத்தின் (neo-liberalism) ’சாரதி’ மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ‘அறிவு ஆணையம்’ என்று சாம் பித்ரோடா போன்றவர்கள் உயர்ந்த பீடங்களில் வீற்றிருந்து இட ஒதுக்கீட்டை இழிவுபடுத்திக் கொண்டிருந்தனர். வேறு வழியின்றி 2011ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டு மக்கள்தொகைக் கணிப்புடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பையும் மேற்கொண்டனர்.
காங்கிரசு, பாஜக இரண்டுமே இதற்கு ஆதரவு அளித்தன, அல்லது ஆதரவு அளிப்பது போல் நடித்தன என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் பணி நேர்மையாகவோ உண்மையாகவோ செய்யப்படவில்லை. கணக்கற்ற குளறுபடிகள் நடந்ததன் விளைவாக இந்தியாவில் 48 இலட்சம் சாதிகள் உள்ளன என்பது போன்ற நகைப்புக்கிடமான ’தரவுகள்’ திரட்டப்பட்டன. 2011 மக்கள்தொகைக் கணிப்பை வெளியிடலாமா என்று அமைச்சரவை கூடி விவாதித்தது. சில அமைச்சர்கள் வெளியிட வேண்டும் என்றனர். வேறு சிலர் வெளியிடவே கூடாது என்றனர். வெளியிடுவதில்லை என்று அமைச்சரவை தீர்மானித்தது.
2014இல் மோதி ஆட்சிக்கு வந்த பின் 2011 முடிவுகளை வெளியிட்டிருக்கலாம். அவர் அது பற்றிக் கவலை கொள்ளவே இல்லை. 2021இல் கொரோனா தொற்றுநோயைக் காரணமாகக் காட்டி மக்கள்தொகைக் கணிப்பு தவிர்க்கப்பட்டது.
பிகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு
சமூகப் பொருளியல் நெருக்கடிகள் முற்றிக் கொண்டிருந்த நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசர அவசியம் என்பது மென்மேலும் உணரப்பட்டது. இந்த நிலையில் நித்திஷ்குமார் தலைமையிலான பிகார் மாநில அரசு 2023ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்து, சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானமும் இயற்றி, கணக்கெடுக்க உரிய பொறிமுறையை ஏற்படுத்தி, இந்தியாவுக்கே வழிகாட்டும் படியான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்தது.
மு.க. ஸ்டாலின் தவற விட்ட வாய்ப்பு
ஆனால் தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த வாய்ப்பைத் தவற விட்டு விட்டது. மக்கள்தொகைக் கணிப்பு நடத்த இந்திய ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், பிகார் மாநில மக்கள்தொகைக் கணிப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்றும் தமிழ்நாடு முதலமைச்சரும் சட்ட அமைச்சரும் சட்டப் பேரவைக்கே தவறான தகவல் கொடுத்தனர். இது தவறான தகவல் மட்டுமன்று, மாநில உரிமையை விட்டுக் கொடுப்பதும் ஆகும்.

பிகார் மாநிலத்தில் நடந்துள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு எல்லா வகையிலும் சட்டப்படியானது, சரியானது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்து விட்டது. தலைமை நீதிபதி கே.வி. சந்திரன், நீதிபதி பார்த்தசாரதி ஆகியோர் வழங்கிய இந்தத் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றமும் தடை செய்ய மறுத்து விட்டது. 50 விழுக்காடு உச்சவரம்புக்கு மேல் இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் அரசாணையைத்தான் நீதிமன்றம் மறுதலித்து விட்டது. இந்த இரு வேறு தீர்ப்புகளையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொண்டதால்தான் தமிழ்நாட்டு முதலமைச்சரும் சட்ட அமைச்சரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாகத் தவறான தகவல் அளித்தனர். சட்டப் பேரவையில் இந்தத் தவறான தகவலை மறுத்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை அறுதியிட்டுரைக்க யாரும் இல்லாமல் போனது சோகம்தான்!
பிகாருக்குப் பிறகு தெலங்கானாவும், கர்நாடகமும் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கு மேல் நடவடிக்கைகளும் எடுக்க முற்பட்டுள்ளன. ஒன்றியப் பட்டியலின் படி இந்திய அரசுக்குள்ள அதிகாரம் ஒருபுறமிருக்க, மாநில அரசுக்கும் அதன் அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் மக்கள்தொகைக் கணிப்பும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த முழு அதிகாரம் உள்ளது. மாநில சுயாட்சி கோரும் தமிழக அரசு இருக்கிற அதிகாரத்தையும் விட்டுத் தருவது நியாயம்தானா?
மோதியின் இந்திய அரசு திடீர் குட்டிக்கரணம் போட்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப் போவதாக அறிவித்திருப்பதை எப்படி நம்புவது? ஒருவேளை அது நடந்தாலும் 1931இல்தான் நடக்கும். முன்கூட்டியே நடப்பதாக வைத்துக் கொண்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்களும் திரட்டப்படும் தகவல்களும் சமூகநீதியை முன்னெடுப்பதற்கு மாறாக, சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து அரசியல் குளிர்காய்வதற்கே உதவக் கூடும். இலவு காத்த கிளி போல் மோதியரசின் கணக்கெடுப்புக்காகக் காத்திருக்காமல் தமிழக அரசு உடனே சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்க வேண்டும். பிகாரில் சிறப்பாக நடந்து முடிந்துள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு உரிய திருத்தங்களுடன் தமிழகத்துக்கும் பயன்படும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் இடஒதுக்கீட்டுக்கு 50 விழுக்காடு மேல்வரம்பு என்னும் மாய்மால இலட்சுமணக் கோட்டை அழிக்க முடியும். பொருளியலில் நலிந்த பிரிவினர் (EWS) என்ற ஏமாற்று வரையறையின் உள்நோக்கத்தை வெளிப்படுத்த முடியும். சாதிவாரிக் கணக்கெடுப்புக்காகப் பரப்புரை செய்த ராகுல் காந்தியே இடஒதுக்கீட்டுக்கு 50 விழுக்காடு எனும் மேல்வரம்பையும் நீக்கக் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படுமானால் அதன் முடிவுகள் சமூகநீதிக் கோரிக்கைகளுக்கு உரமூட்டும். இதைத் தெரிந்து வைத்திருந்தமையால்தான் மோதி ”இது அர்பன் நக்சல் மனப்போக்கு” என்று விளாசினார். சாதிவாரிக் கணக்கெடுப்பை அறிவித்தாலும் அதை உள்ளிருந்து சீர்குலைக்க ஆர்எஸ்எஸ் பரிவாரத்துக்குத் தெரியும். 2011இல் நடந்த குழப்படியை மறந்து விட வேண்டாம்.
வழிகாட்டும் பிகார்
சாதிவாரிக் கணக்கெடுப்பை எப்படி அறிவியல் முறையில் நடத்துவது? எப்படித் தடைகளைக் கடப்பது? என்னென்ன வினாக்கள் கேட்பது? எப்படி உண்மையைக் கண்டறிவது? எப்படித் தரவுகளைத் திரட்டித் தொகுப்பது? எப்படி இறுதி அறிக்கை வரைவது? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பிகாரில் 2023ஆம் ஆண்டு நடந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு விடை சொல்கிறது. தமிழ்நாடும் மற்ற மாநிலங்களும் பிகாரை வழிகாட்டியாகக் கொண்டு தத்தமது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம். அந்தந்த மாநிலத்துக்குமான சிறப்புத் தேவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு இப்போதே சாதிவாரிக் கணக்கெடுப்பைத் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். சமூக நீதிக் கொள்கைகளை வலுவாக முன்னெடுக்க, இதுபோல் வேறு ஏதும் உதவாது. இந்த முன்முயற்சி தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப் போடுவதாக அமையும் என்று நம்புகிறேன்.

இறுதியாக, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கும் சாதி ஒழிப்புக்குமான உயிர்த் தொடர்பை விளங்கிக் கொள்ள… பாட்னா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதியர் கே.வி. சந்திரனும் நீதியர் பார்த்தசாரதியும் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் தொடக்கப் பத்தியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் அரசின் செயலை எதிர்த்து இந்த நீதிப்பேராணை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை, தனிமையுரிமை மீறப்படுவதால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது உள்ளிட்ட பற்பல காரணங்களைச் சொல்லி அரசின் இந்தச் செயலுக்கு எதிராகக் கடும் அறைகூவல் விடுகின்றன. சாதி என்பது அதனை சமூக நெசவிலிருந்து அழிக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டுள்ள போதிலும் ஒரு மெய்ந்நடப்பாகவே இருந்து வருகிறது, அதனைத் துடைத்தெறியவோ, பெருக்கித் தள்ளவோ, ஒதுக்கி விலக்கவோ முடியவில்லை, அது வாடி உதிரவும் இல்லை, காற்றில் கரைந்து போகவும் இல்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.”
ஆம், சாதி ஒழிந்திட சாதிவாரிக் கணக்கெடுப்பு!
(தொடரும்)