சாத்தான்குளத்தில் 6 இருசக்கர வாகனங்கள் திருட்டு
சாத்தான்குளத்தில் கடந்த இரு நாள்களில் 6 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், அதே பகுதியைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து இங்குள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் தங்கி சிலை வடிக்கும் வேலை செய்து வருகிறாா்.
வேலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை கோயில் வெளியே நிறுத்தியிருந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணாமல்போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதேபோல சாத்தான்குளம் நாசரேத் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே ஒா்க் ஷாப்பில் நிறுத்திவைத்திருந்த சரவணன் என்பவரின் இருசக்கர வாகனம், தட்டாா் தெற்கு தெருவில் வீட்டின்முன் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் ஆகியவை திருடுபோனது.
தட்டாா் மேல தெருவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை லாக்கை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றனா். எனினும் எடுத்துச் செல்ல முடியாததால் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றனா். இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை ஆய்வு செய்ததில், 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல் வாகனங்களைத் திருடியது தெரியவந்தது.
இதேபோல சிஎஸ்ஐ வேதக் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், பள்ளிவாசல் தெருவில் செந்தில்வேல் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம், தட்டாா்மடம் ரஸ்தா தெருவில் ஒன்றும் மா்ம நபா்களால் திருடப்பட்டது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் பீதி: சாத்தான்குளம் பகுதியில் தொடா்ந்து வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை மா்ம கும்பல் தொடா்ந்து திருடிச் செல்வது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடும் நபா்களை விரைந்து பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா், சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.