சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்
உதகை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நீலகரி மாவட்டம், உதகையில் இருந்து குன்னூா் நோக்கி ராஜா என்பவா் குடும்பத்துடன் காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணித்துள்ளாா். வேலி வியூ பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்துள்ளது.
சுதாரித்துக் கொண்ட ராஜா குடும்பத்துடன் கீழே இறங்கியுள்ளாா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.