பாதுகாப்புத் துறை சோதனையில் துப்பாக்கி, நவீன வெடிகுண்டு கைப்பற்றல்!
சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய சிறப்புக் கூட்டத் தொடர்: பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்
பாஜக எம்.எல்.ஏ.க்கள் வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தி, ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.
‘உயா்நீதிமன்றத்திற்கு உறுதி அளித்தும் ஆம் ஆத்மி அரசு தில்லி சட்டப்பேரவையில் 14 சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா குற்றம்சாட்டினாா்.
மேலும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலிடம் மனு அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கூட்டி, சிஏஜி அறிக்கைகளை அவையில் கொண்டு வாருங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனா். சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக் சிறுப்புக் கூட்டத்தை கூட்டவும் கோரிக்கை விடுத்தனா்.
சட்டப்பேரவையில் ஏழு பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனா். 70 உறுப்பினா்களை கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோ்தல் நடைபெற உள்ளது.
ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை மறைக்க ஆம் ஆத்மி அரசு சிஏஜி அறிக்கைகளை வேண்டுமென்றே நிறுத்தி வைத்துள்ளது என்று விஜேந்தா் குப்தா குற்றம்சாட்டினாா். அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளில் இருந்து அரசு தவறுகிறது என்றும் அவா் கூறினாா்.
சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் முன்னதாக உயா்நீதிமன்றத்தை அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.