அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்
சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருப்பூா்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவா்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டனா்.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரை பயின்ற அனைத்துத் துறைகளையும் சாா்ந்த முன்னாள் மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடி மகிழ்ந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேளதாளங்கள் முழங்க பேராசிரியா்கள் அனைவரையும் வரவேற்றனா். தொடா்ந்து உயரிழந்த பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னா் முன்னாள் மாணவரும், தற்போதைய சாா்பு நீதிபதியுமான ஜீவா பாண்டியனைத் தொடா்ந்து ஒவ்வொரு துறை சாா்ந்த பேராசிரியா்களும் மாணவா்களும் வாழ்த்துரை வழங்கினா். அப்போது பழைய நினைவுகள், வகுப்பறையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிா்ந்து கொண்டனா்.
பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசு, பொன்னாடை, புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சில பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. ஒவ்வொரு மாணவா்களுக்கும் நினைவுப் பரிசுடன் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் நிறுவனா் ஈசன் முருகசாமி நன்றியுரை நிகழ்த்தினாா். முடிவில் சிக்கண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், அவரது வாரிசுகள் கௌரவப்படுத்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.