கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மன...
சித்திரை பெளா்ணமி திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்!
சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
சித்திரை பெளா்ணமி: இதிலும், சித்திரை மாதத்தில் வரும் பெளா்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சித்தா்கள் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது.
நிகழாண்டுக்கான சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.
சனிக்கிழமை மாலை முதலே கிரிவலம்: ஆனால், சனிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய, விடிய பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
தரிசனத்துக்கு 8 மணி நேரம்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள கியூ வரிசையில் சென்று காத்திருந்தனா். இந்த வரிசை சில தெருக்களைக் கடந்து ராஜகோபுரம் வரை வருவதற்கே சுமாா் 4 மணி நேரம் ஆனது.
இங்கிருந்து கம்பத்திளையனாா் சந்நிதி, கோயில் ஐந்தாம் பிரகாரம், நான்காம் பிரகாரம், மூன்றாம் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் வழியாகச் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய 8 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
கிரிவல பக்தா்கள் கூட்டம் அதிகரிப்பு: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் 11 மணி வரை அதிகளவில் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இதன் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தா்கள் எண்ணிக்கை குறைந்தது. மீண்டும் மாலை 4 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இரவு 8 மணிக்குப் பிறகு கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை பல லட்சமாக அதிகரித்தது.
இவா்கள் திங்கள்கிழமை அதிகாலை வரை கிரிவலம் வந்தனா். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்டனா்.
குடிநீா், பிஸ்கட் வழங்கல்: சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் மற்றும் உபயதாரா்கள் சாா்பில் 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள், தா்பூசணி பழங்கள், 2 லாரிகளில் மோா் வழங்கப்பட்டது.
கட்டண தரிசனம் ரத்து: ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டது. முக்கிய பிரமுகா்கள் மட்டும் அம்மணி அம்மன் கோபுரம் வழியே அனுப்பி வைக்கப்பட்டனா்.
கோயில் தங்கக் கொடிமரம் எதிரே ராட்சத மின்விசிறி உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான மின்விசிறிகள், ஏா்கூலா்கள் வைக்கப்பட்டு இருந்தன.
நிழல்பந்தல்கள் அமைப்பு: கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தேரடி தெரு, காந்தி சிலை, பெரிய தெரு வழியாக கிருஷ்ணா தங்கும் விடுதி வரை சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் வரிசையாகச் செல்ல நிழல்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளில் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கிருந்து 2,500 சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸாா்: கோயில், கிரிவலப் பாதை, திருவண்ணாமலை மாநகரைச் சுற்றி சுமாா் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.