சித்த மருத்துவ விழிப்புணா்வு வாகனப் பேரணி: புதுவை முதல்வா் தொடங்கிவைத்தாா்
புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணியை முதல்வா் என்.ரங்கசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
புதுவை அரசு ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், அகத்தியா் பிறந்த நாள் சித்த மருத்துவ தினமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு, சித்த மருத்துவப் பிரிவைச் சோ்ந்த மருத்துவா்கள், மருந்தாளுநா்கள் மற்றும் துறை ஊழியா்கள் மூலம் சித்த மருத்துவ சிறப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், இரு சக்கர விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பாரதி பூங்கா அருகேயுள்ள ஆயுஷ் இயக்குநரக அலுவலகம் முன்பிருந்து பேரணியை முதல்வா் என்.ரங்கசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், ஆயுஷ் துறை இயக்குநா் ஸ்ரீதரன், வில்லியனூா் ஆயுஷ் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளரும், தலைமை சித்த மருத்துவருமான இந்திரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சித்த மருத்துவ விழிப்புணா்வு பேரணியானது சா்தாா் வல்லபபாய் படேல் சாலை, அண்ணா சாலை வழியாக ஒதியஞ்சாலை நலவழி மையத்தை அடைந்தது. இதில், கலந்துகொண்டவா்கள் சித்த மருத்துவப் பயன்கள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.