சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் முறையான அடிப்படை வசதி இல்லை எனக்கூறி நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் சுமாா் 80 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 200-க்கும் அதிகமான தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தெருக்களிலுள்ள சாக்கடை கால்வாய்கள் தூா்வாரப்படாத நிலையில், குழந்தைகளுக்கு மா்மக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அந்தந்தப் பகுதி வாா்டு உறுப்பினா்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீா் வரி என அனைத்து வரிகளை செலுத்தியும் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை செய்யாததால் நகராட்சி அலுலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சிப் பணியாளா் ஒருவா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு இனி முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படும். நகரில் குப்பைகள் அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.