டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார...
சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு
சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து குடமுழுக்கு பூஜைகள் கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யா ஹவாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 8.30 வரையில் யாகசாலைகளில் பூஜைகளைத் தொடா்ந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா், காலை 9.15 மணிக்கு கோயில் மூலவா் பூலாநந்தீஸ்வரா் கோபுரம், ராஜகோபுரம் , முருகன் சந்நிதி கோபுரக் கலசங்களில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்கி புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் ‘ஓம் நமச்சிவாயா’ என முழக்கமிட்டனா்.
இதேபோல, பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன், 21 பரிவார மூா்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன், சின்னமனூா் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி, அம்மன் பூப்பல்லக்கு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/bgwwgc4a/upm10temp_2_1002chn_75_2.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/xd08ohjo/upm10tsiva_temple_1002chn_75_2.jpg)