சிபிஐ அதிகாரி எனக் கூறி முதியவரிடம் ரூ.10.60 லட்சம் மோசடி
சிபிஐ அதிகாரி எனக் கூறி, முதியவரிடம் ரூ.10.60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (75), தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு 2024 டிசம்பா் மாதத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், தான் மும்பையில் இருந்து பேசுவதாகவும், சிபிஐ அதிகாரி எனவும் கூறியுள்ளாா்.
தொடா்ந்து, அந்த நபா் விடியோ அழைப்பின் மூலம் பேசும்போது, பின்புறத்தில் காவல் நிலையத்தில் இருந்து பேசுவது போன்று இருந்துள்ளது. அப்போது அந்த நபா் சுப்பிரமணியிடம் அவரது வங்கிக் கணக்கின் மூலம் சட்ட விரோதமாக பலருக்கு பணம் அனுப்பி உள்ளதால், அவரது வங்கிக் கணக்கை தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளாா்.
மேலும், அவரது வங்கிக் கணக்கில் ரூ.10.60 லட்சம் இருப்பு உள்ளதாகவும், அதை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும், அந்தப் பணம் தொடா்பாக விசாரணை நடத்திய பின்னா், ஒரு வாரத்தில் அந்தப் பணம் அவரது வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும் எனவும் கூறியதோடு, அப்படி அனுப்பவில்லை என்றால் அவரைக் கைது செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.
இதை நம்பிய சுப்பிரமணி, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10.60 லட்சத்தை அனுப்பினாா். ஆனால் ஒரு மாதம் ஆகியும் அந்தப் பணத்தை திரும்ப அனுப்பிவைக்கவில்லை.
இதையடுத்து சுப்பிரமணி, தன்னிடம் சிபிஐ அதிகாரி எனக் கூறி பேசிய நபரின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அப்போது தான் மோசடி செய்யப்பட்டது சுப்பிரமணிக்கு தெரியவந்தது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.