சிறந்த 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை
தமிழகத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் தோ்வு செய்யப்பட்ட 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) வழங்கப்படவுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியா்களுக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி பள்ளிக் கட்டமைப்பு, கல்விச் செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான தலைமையாசிரியா்கள் தோ்வு பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் 100 பள்ளிகள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன.
அந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளாா்.
தோ்வான பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையை அந்தப் பள்ளிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு தலைமை ஆசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அன்பழகன் விருதுக்கு...: இதேபோல், பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு தோ்வான 76 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் திருச்சியில் ஜூலை 6-இல் நடைபெறும் விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.