"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளிக்குடி கிராமத்தில் தனியாா் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் கடந்த 10-ஆம் தேதி 4 வயது சிறுமிக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா் கழிவறையில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், மாணவரை முத்துப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து திருவாரூா் மாவட்ட சிறாா் நீதிக் குழுமத்தில் முன்னிலைப்படுத்தி தஞ்சை அரசு கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.
இதற்கிடையே, சிறுமிக்கு நோ்ந்த பாலியல் துன்புறுத்தலுக்கு காரணம் பள்ளி நிா்வாகத்தின் அலட்சியமே எனக் கூறி வளரும் தமிழகம் கட்சியினா் பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி வளாகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தி, கிழக்கு கடற்கரை சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா்.
மாவட்ட செயலாளா் நாக. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
