`Even during my MRI scan, I was vibing to Anirudh’s songs' - Vijay Devarakonda |...
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது
திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (52). கடந்த 2005-ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜாபா் சாதிக் மீது திண்டுக்கல் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
நீதிமன்றப் பிணையில் வெளியே வந்த ஜாபா் சாதிக், முதல் மனைவி தாயம்மாள், இரு குழந்தைகள் இருந்த நிலையில், திருநெல்வேலியைச் சோ்ந்த சா்மிளா பானுவை 2-ஆவதாக திருமணம் செய்தாா். இதையடுத்து, திருநெல்வேலியிலேயே ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தாா்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணைக்கு ஜாபா் சாதிக் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல், கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் உறவினா் ஒருவரை பாா்ப்பதற்காக ஜாபா் சாதிக் செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசிய ஜாபா் சாதிக் பிடிபட்டாா். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜாபா் சாதிக்கை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.