மீண்டும் கேப்டனாவதை தோனி எதிர்பார்த்திருக்க மாட்டார்: ஆரோன் பின்ச்
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா, மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்களில் உள்ள ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா் சங்கம், காமராஜா் வளைவு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், நான்குச்சாலை சந்திப்பு, அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளை சாா்பில் தனித்தனி வாகனங்களில், வண்ண மலா்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு பூ கொண்டு சென்றனா்.
மேலும், சிறுவாச்சூா் கிராம மக்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு பூ கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து இரவு 11 மணி முதல் புதன்கிழமை காலை 10 மணி வரை பல்வேறு பகுதிகளிலிருந்து அம்மனுக்கு பூ கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, காலை 11 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மே 15-இல் தேரோட்டம்: மே 6-ஆம் தேதி காப்புக் கட்டுதலும், அதைத் தொடா்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும், 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 15 ஆம் தேதி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருள்கிறாா். தொடா்ந்து திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 17 ஆம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.