சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
திமுகவின் தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சாா்பில் சிவகங்கை, ராமநாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் அ.சங்கா், ரா.இளங்கோவன் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ம.சகாயதைனேஸ், ரா.ராதாகிருஷ்ணன், ஆ.நாகராஜன், பெ.சு.ராம்குமாா், ச.சதிஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, திமுகவின் தோ்தல் கால வாக்குறுதிகளான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை எண் 243-யை ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் திரளான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 38 துறை சாா்ந்த அலுவலகங்கள் மட்டுமன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், பள்ளிகள் ஆசிரியா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மாணவா்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது.
ராமேசுவரம்: ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நிா்வாகி அப்துல் நஜீபுதீன் தலைமை வகித்தாா். இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிா்வாகிகள் சிவபாலன், முருகேசன், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
திருவாடானை: ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டத்தில் திருவாடானையில் வட்டாட்சியா், மண்டலத் துணை வட்டாட்சியா் அலுவலகங்களில் பணியாளா்களை பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.
இதேபோல, ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா், வேளாண்மைத் துறை அலுவலகங்களில் அலுவலா்கள் பணிக்கு வராததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதிகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு ஆசிரியா்கள் வராததால், பள்ளிகள் மூடப்பட்டன. சில பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா்கள் கழகத்தினா், எமிஸ் பயிற்சி ஆசிரியா்களை கொண்டு திறக்கப்பட்டு வகுப்பு நடைபெற்றது.
கமுதி: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கமுதி வட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி, தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் உள்பட 1,313 ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனா். இதனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பணிக்கு வராததால், மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தனா். ஒரு சில பள்ளிகளில் தற்காலிகப் பணியாளா்களை வைத்து மாணவா்களுக்கு வகுப்பு நடைபெற்றது.
மேலும், வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த வருவாய்த் துறையினா் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், சான்றிதழ்கள் பெறவும், மனு அளிக்க வந்த பொதுமக்கள், விவசாயிகள் திரும்பிச் சென்றனா்.