சுங்குவாா்சத்திரம் தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்
சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதியில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதியைச் சோ்ந்த கோபு (50). ஆட்டோ ஓட்டுநரான இவா் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில் கோபுவின் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையம் மற்றும் சந்தவேலூா் தனியாா் நிறுவனத்தின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியாா் நிறுவனத்தின் தீயணைப்புத் துறையினா் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருந்த போதிலும், வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், குடும்பஅட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளும், சான்றிதழ்களும் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.