சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை
சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்க 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம.ராஜசேகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறைச் சட்டம், உணவு நிறுவன சட்டம் , மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு தெரிவித்து, அதன் நகலை தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பியும், தொழிலாளா்கள் பாா்வையில் படும்படியும் காட்சிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தொழிலாளா்களின் சட்டத்தை பின்பற்றாத 63 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.