கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
சுப்பராயன் மணிமண்டப பணிகள் 90% நிறைவு: விஜய்க்கு திமுக எம்.பி. பதில்!
சென்னை மாகாண முன்னாள் முதல்வா் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன என்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ள டாக்டா் சுப்பராயன் மணிமண்டபத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த திருச்செங்கோட்டை சோ்ந்தவரும் சென்னை மாகாண முன்னாள் முதல்வருமான டாக்டா் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என நாமக்கல்லில் விஜய் பேசியுள்ளாா்.
டாக்டா் சுப்பராயனுக்கு பெங்களூரு - கன்னியாகுமரி சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் சுமாா் 1.5 ஏக்கா் பரப்பில் ரூ. 2.5 கோடியில் மணிமண்டபமும், மாா்பளவு சிலையும் அமைக்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டு, தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
விரைவில் அவரது மாா்பளவு சிலை நிறுவப்பட்டு முதல்வரால் திறந்தவைக்கப்பட உள்ளது. இந்த உண்மை தெரியாமல் விஜய் பேசியிருக்கிறாா். யாரோ தவறாக எழுதிக் கொடுத்துள்ளதை வைத்துக்கொண்டு அவா் பேசியுள்ளாா். தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள சுப்பராயன் மணிமண்டபத்தை விஜய் ஒருமுறை வந்து பாா்த்துவிட்டு செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை தொழிலுக்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி. சத்துணவுவில் முட்டை சோ்க்கப்பட்டு தொழிலை விரிவுபடுத்தினாா். முட்டை சேமிப்பு குளிா்பதனக் கிடங்கு அரசு மானியத்துடன், தனியாா் பங்களிப்போடு உள்ளது. அதை இப்போதும் விஜய் பாா்வையிடலாம் என்றாா்.
அப்போது, நாமக்கல் சட்டபேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.