சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சும்மாவா?
இந்தியாவில் இருக்கும் மிகவும் வித்தியாசமான வீடுகள் மற்றும் பங்களாக்களை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானவர் பிரியம் சரஸ்வத்.
இவர் அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டப்பட்டிருக்கும் 24 காரட் தங்க வீட்டை விடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இப்போது யாரும் இந்த விடியோவை பார்க்க முடியாது. ஏனென்றால், பல்வேறு காரணங்களால் அந்த விடியோவை அவர் நீக்கிவிட்டிருக்கிறார்.
ஆனால், அவர் பதிவிட்ட வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கண்களையும் விரியச் செய்திருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரராக இருக்கும் அனூப் அகர்வாலின் வீடுதான் அது. வீட்டின் சுவர், சுவிட்ச் போர்டு கூட தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல என்று சொல்லும் பழமொழியை பொய்யாக்கி, அவர் வீடு முழுக்க தங்கம் மின்னிக்கொண்டிருக்கிறது.
நாற்காலிகள், விளக்குகள், பொம்மைகள் என அனைத்தும் தங்கத்தால் ஆனவை, அல்லது தங்கத் தகடால், தங்க முலாம் பூசப்பட்டவை. தண்ணீர் குழாய்கள் கூட தங்க முலாம் பூசப்பட்டிருக்கும் என்பதைத்தான் பலரும் அதிசயத்துடன் பார்த்துள்ளனர்.
இந்த வீட்டின் அலங்காரம் குறித்து அனூப் அகர்வால் கூறுகையில், சாலைகள் போடுகிறோம், மேம்பாலம் கட்டுகிறோம், அதனால் எனது நிலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்று விடியோவில் கூறியிருந்தார்.
இந்த விடியோ வைரலான நிலையில், பலரும், மோசமான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். காங்கிரஸ் கட்சியினர், இப்போது தெரிகிறதா ஏன் புதிதாகப் போடப்படும் சாலைகளும் மேம்பாலங்களும் விரிசல் விடுகிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இந்த வீடு முழுக்க அரசுப் பணம் என்று மக்களும் கருத்திட்டிருக்கிறார்கள். இது பூதாகரமாக மாறிய நிலையில், விடியோவை அவர் நீக்கியிருக்கிறார்.