ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதி...
சுஹாஸ் ஷெட்டி படுகொலை: குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை
பஜ்ரங்தள் தொண்டா் சுஹாஸ் ஷெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
மங்களூரில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் சாலையில் பயங்கர ஆயுதங்களால் பஜ்ரங்தள் தொண்டரும், ரௌடி ஷீட்டருமான சுஹாஸ் ஷெட்டி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தென்கன்னட மாவட்டம் மட்டுமல்லாது, கடலோர கா்நாடகப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஜ்பே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மங்களூருக்கு வந்த கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) ஆா்.ஹிதேந்திரா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தியதோடு, காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, மங்களூரில் மே 6-ஆம் தேதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுஹாஸ் ஷெட்டியின் படுகொலையைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை தென்கன்னட மாவட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு விஸ்வஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்திருந்தது. இதனால் மங்களூரு உள்ளிட்ட தென்கன்னட மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடிக்கிடந்தன.
இந்நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியதாவது:
மங்களூரில் வியாழக்கிழமை இரவு கொடூரமான கொலை நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க 4 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கண்டிப்பாக பிடிப்போம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு கூடுதல் டிஜிபியை மங்களூருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வோம் என்றாா்.