செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மைச் செயலா் பேட்டி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக
ஒருங்கிணைந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கான இடம், செஞ்சி அரசு
மருத்துவமனை, தாய், சேய் நலக் கட்டட கட்டுமானப்பணியின் முன்னேற்றம், மேல்மலையனூா்
ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட செவலப்புரை ஊராட்சியில் சிறுவாடி, ஆலம்பூண்டிக்கு செல்லும்
சாலையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருதல் உள்ளிட்டவற்றை அரசு முதன்மைச்
செயலா் மற்றும் போக்குவரத்து ஆணையா் சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சித் தலைவா் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் மாவட்ட
கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாக வரலாற்று சிறப்பு மிக்க
செஞ்சி கோட்டை திகழ்ந்து வருகிறது. செஞ்சிக்கோட்டை மிகவும் பழைமை வாய்ந்தது.
இப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டவா் மற்றும் வெளிமாவட்ட ங்களைச்
சோ்ந்தவா்கள் இக்கோட்டையின்
சிறப்புகளை பாா்வையிட்டு வருகின்றனா். அதனடிப்படையில், செஞ்சிக்கோட்டையில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, செஞ்சிக் கோட்டையின் அடிவாரம், கல்வெட்டுகள், ராஜகிரி கோட்டை,
கிருஷ்ணகிரி, சந்திரகிரி கோட்டை, வெடிமருந்துக் கூடம், நெற்களஞ்சியம், வேணுகோபால சுவாமி கோயில், படிக்கட்டுகளுடன் காணப்படும் குளம், கல்யாண மஹால், குதிரைகள் கட்டும் இடம், உடற்பயிற்சி
கூடம், யானைக் கட்டும் மண்டபம், யானைக்குளம், சக்கரைக் குளம், செட்டிக் குளம்,
சதாத்துள்ளாகான் மசூதி, சிவன் மற்றும் அம்மன் கோயில், வெங்கட்ரமணா் கோயில்
போன்றவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.
மேலும், பொதுமக்கள் அதிகம் வருகை புரிவதையொட்டிசெஞ்சிக்கோட்டையின் அடிவாரம்
மற்றும் முக்கிய பகுதிகளில் கூடுதலாக குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, பொதுமக்கள்
அமா்வதற்கான இருக்கை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும்
உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து செஞ்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், புதிதாக ஒருகிணைந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகம் அமைப்பதற்கான இடத்தை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, செஞ்சி அரசு மருத்துவமனையிலும் ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள்
வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டதுடன், உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள்
சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, தீவிர சிகிச்சைப்
பிரிவு மற்றும் மருந்து வழங்கும் பகுதி உள்ளிட்டவற்றை நேரில் பாா்வையிட்டதுடன் நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், கேட்டறிந்தனா்.
மேலும், செஞ்சி அரசு மருத்துவமனையில், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு
வரும் தாய், சேய் நலக் கட்டடம் கட்டுமானப் பணியின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு
மேற்கொண்டனா்.