செண்பகாதேவி அம்மன் கோயிலில் தீா்த்தவாரி
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந்த 3ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுவதுடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினம் தோறும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சாா்பில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது.
முக்கிய விழாவான சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பால்குட ஊா்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாரதனைகள், மதியம் உச்சி கால பூஜை ஆகியவை நடைபெற்றன.
ஏராளமான பெண்கள் அவ்வையாா் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனையைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் அம்மனுக்கு செண்பகாதேவி அருவியில் தீா்த்தவாரி நடைபெற்றது.
பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வீரபாண்டியன், ஸ்ரீதா், சுந்தர்ராஜ், ராமலட்சுமி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை, குற்றாலம் பிரிவு வனவா் சங்கர்ராஜா, வனவா் மோகன், வன காப்பாளா் முத்துசாமி உள்ளிட்ட 32 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.