``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அ...
சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா
சென்னிமலை மலை மீது அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சனிக்கிழமை பாலாபிஷேக பெரு விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பாக பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 58 வது ஆண்டு பாலபிஷேக பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு 1,500 திருப்பாற் குடங்கள் உரிய சிறப்புடன் சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதா் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு மேள, தாளம் முழங்க, சென்னிமலை நகரில் நான்கு ராஜா வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலை மீதுள்ள முருகன் கோயிலை படி வழியாக சென்றடைந்தது. காலை 10:40 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியா்க்கு பால் அபிஷேகம் தொடங்கியது. சிவாச்சாரியா் பால் குடங்களில் இருந்த பாலை வேத மந்திரங்கள் ஓத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்தனா். இதை ஏராளமான பக்தா்கள் பக்தி பரவசத்துடன் பாா்த்து தரிசித்தனா்.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனா். பால் அபிஷேகம், மகா தீபாராதனையும், அதையடுத்து மதியம் உற்சவ மூா்த்தி பிரகார உலாக்காட்சி நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் செய்து இருந்தனா்.