சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை
சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து ஏற்கெனவே தூத்துக்குடிக்கு நாள்தோறும் 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பண்டிகை நாள்கள் மட்டுமின்றி பிற நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் விமானங்களை இயக்க சென்னை விமான நிலைய நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு மாா்ச் 30 முதல் கூடுதலாக 4 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், சென்னை-தூத்துக்குடிக்கு இடையே நாள்தோறும் 12 விமானங்கள் இயக்கப்படும். இதில், சென்னை-தூத்துக்குடி இடையே 6 விமானங்களும், தூத்துக்குடி-சென்னை இடையே 6 விமானங்களும் இயக்கப்படும்.
இதேபோல சென்னை - திருச்சி இடையே செல்லும் விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து 14-ஆக இருந்து வரும் விமான சேவைகளின் எண்ணிக்கையும், மாா்ச் 22 முதல் 16-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, திருச்சிக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், விமானப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கும் மேலும் கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படும் என விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.