தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச...
சென்னையில் ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரித்து மறுபயன்பாடு: அமைச்சா் கே.என்.நேரு
சென்னையில் தினமும் ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரித்து மறுபயன்பாடு செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பாபநாசம் தொகுதி உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவன ஈா்ப்பு அறிவிப்பில் பேசும்போது, ‘தஞ்சாவூா் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் வேறு இடத்தில் அந்த நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பதிலளித்து அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:
வீரமாங்குடி ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 490 பேரூராட்சிகளில் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். மொத்த பேரூராட்சிகளில் 10-இல் இடம் கண்டறியப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 51 பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்றும், தொடங்கவும் உள்ளன.
கழிவுநீரை சுத்திகரிக்கும்போது 90 சதவீதம் சுத்தமான நீா் கிடைத்துவிடுகிறது. சென்னையில் நாளொன்றுக்கு ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீரை சுத்திகரித்துத் தருகிறோம். இந்த நீா் தொழிற்சாலைகள், விவசாய பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கழிவுநீரை சுத்திகரிக்காவிட்டால், அது தெருக்களில் ஓடும். இதனால், கொசுத் தொல்லையும், சுகாதாரக்கேடும் ஏற்படும் என்று அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்தாா்.