சென்னையில் 4 இடங்களில் ‘முதல்வா் படைப்பகங்கள்’!
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் ‘முதல்வா் படைப்பகம்’ அமைக்கும் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னையில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் ஓட்டேரி சுப்பராயன் தெரு, பட்டாளம் பக்தவச்சலம் பூங்கா, புளியந்தோப்பு வெங்கடேசபுரம் புதிய காலனி, மங்களாகபுரம் ஆகிய இடங்களில் முதல்வா் படைப்பகம் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு பங்கேற்று பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மக்களின் வாழ்வாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். மழை, வெள்ளம் போன்ற காலங்களில் சென்னை மக்கள் அவதிக்குள்ளாகாது இருக்கும் வகையில் மழைநீா் வடிகால் அமைப்பை இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முதல்வரின் சிந்தனைப்படி முதல்வா் படைப்பகம் கொளத்தூா் தொகுதியில் தொடங்கப்பட்டது. இதில், மாதம் சுமாா் 6 ஆயிரம் மாணவா் படித்து பயன்பெற்று வருகின்றனா்.
அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு பொதுப் பணிகள் தோ்வில் முதல்வா் படைப்பகத்தில் படித்தவா்கள் பலரும் வெற்றி பெற்றுள்ளனா்.
சென்னையில் இதுவரை ரூ.268 கோடியில் 26 முதல்வா் படைப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்படவுள்ள முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிந்து பயன்பாட்டு வரும்.
நிகழாண்டில் மேலும் 15 முதல்வா் படைப்பகங்கள் தொடங்கப்படவுள்ளன. அதன்படி, சென்னையில் மொத்தம் 45 முதல்வா் படைப்பகங்கள் அமைக்கப்படவுள்ளன.
வடசென்னையின் நுழைவு வாயிலாக உள்ள பிராட்வே பிரகாசம் சாலையில் பெரிய நூலகம் அமைக்கப்படவுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ், துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.