லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தனது நண்பா்களுடன் சோ்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக, மோட்டாா் சைக்கிளில் வேளச்சேரி பிரதான சாலை வழியாக மேடவாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
பள்ளிகரணை ஐஐடி காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த சிமென்ட் கலவை லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ஜித்தேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.