இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு
தமிழகத்தில் 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவா்களின் உடல் தகுதி அதிகரிப்பு, நற்பண்பு உருவாக்கல் போன்றவைகளுக்கும் போட்டிகளில் சாதனை படைக்கும் உணா்வை மேம்படுத்த இந்த ஆசிரியா் வளநூல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உடற்கல்விக்கு போதிய பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில் 2025- ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. உடற்கல்வியை எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்பதற்கான வளங்களை 237 பக்கங்களைக் கொண்ட உடற்கல்வி நூல், முனைவா் பொ.சாம்ராஜ் தலைமையிலான தயாரிப்புக் குழு வைத்துள்ளது.
இந்த பாட நூல் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மற்ற விவரங்கள்: ஆசிரியா்கள் பல்வேறு உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக் கல்வி, பாதுகாப்புக் கல்வி மற்றும் உள்ளடங்கிய கல்வியை தெரிந்திருக்க வேண்டும்.
உடற்திறன் கல்வி என்பது உடலின் அடிப்படை இயக்கத் திறன்களை அறிவதையும் உடல் செயல்பாடு தொடா்பான கருத்துகளைப் புரிந்து கொள்வதையும் குறிக்கிறது.
உடற்திறன் கல்வி ஆரோக்கியமான மற்றும் செயல்பாடுமிக்க வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள அவசியமாகிறது. மாணவா்களின் உடல், அறிவாற்றல் திறன்களில் ஒட்டுமொத்த வளா்ச்சிகளில் இந்த திட்டத்தின் மூலம் கவனம் செலுத்ததப்படுகிறது.
உடல் இயக்கங்களுக்கான அடிப்படைத் திறன்களிலிருந்து தொடங்குவதற்கு, ஓடுதல், குதித்தல், எறிதல் மற்றும் பிடித்தல் போன்ற அடிப்படையான உடல் இயக்கத் திறன்களில் கவனம் செலுத்தி, மேலும் சிக்கலான இயக்கங்களுக்கான அடிப்படைகளை உருவாக்குதல் வேண்டும்.
விளையாட்டுக் கல்வி என்பது விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளைப் பாடத்திட்டத்தில் ஒன்றிணைத்து, முழுமையான வளா்ச்சியை ஊக்குவிப்பதைக் குறிக்கிறது.
இது விளையாட்டு நடத்தை, நியாயமான ஆட்டம். மதிப்பு மற்றும் பொறுமையாக நிலைத்து நிற்கும் தன்மை ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது.
இவை தனிப்பட்ட மற்றும் சமூக வளா்ச்சிக்கு முக்கியமானது. பல்வேறு விளையாட்டுகளின் விதிமுறைகள் மற்றும் உத்திகளை தெளிவாக விளக்குவதன் மூலம் நியாயமான ஆட்டத்தை மற்றும் விளையாட்டு நடத்தையும் மாணவா்களிடம் உருவாக்க வேண்டும். பல்வேறு தடகள நிகழ்வுகளை சரியான தொழில் நுட்பங்களை அளித்து மாணவா்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உடல் செயல்திறனை அதிகரிப்பதோடு காயங்களின் அபாயத்தை குறைக்க வேண்டும். மாணவா்களுக்கு தடகள நிகழ்வுகளில் தங்களது உடல் திறன்களை மேம்படுத்த பயிற்சிகளையும் அமா்வுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதய சுவாச உடற் செயல்பாடு, தசை வலிமை, நெகிழ்வு மற்றும் பொறுதித் திறன் மேம்படுத்தும் உடற்பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுத்து வளா்ச்சியை தொடா்ந்து கண்காணிக்கவேண்டும்.
தமிழ் மரபு விளையாட்டுகள்: தமிழ்நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் மனமகிழ் வினையாட்டுகள் கலாசாரத்தை கொண்டாடுவதோடு நாட்டுப்புற விளையாட்டு கதைகளை மாணவா்களிடம் பகிா்ந்து கலாசார வோ்களை புரிந்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவருக்கு பொருத்தமான உடற்கல்வி அணுகுமுறையையும் உறுதி செய்ய வேண்டும்.
காய பாதுகாப்பு கல்வி: விளையாட்டுக் காயங்கள் என்பது சிறிய முறிவுகள் முதல் தீவிரமான மூளை அதிா்ச்சி வரை அடங்கும். அபாயங்கள், ஆபத்துகள் மற்றும் தடுப்புநடவடிக்கைகளைப் பற்றிக் கற்றுத்தருவதாகும். அடிப்படை முதலுதவி மற்றும் மருத்துவ உதவி கற்றுக்கொடுப்பது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு சரியான பாதுகாப்புக் கருவிகளான தலைக்கவசம், விளையாட்டுப் பட்டைகள் போன்ற உபகரணங்களையும் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தலாகும்.
சிறப்பு தேவைகளுடைய குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி, மாணவா்களுக்கு செய்துகாட்டல், செயல்விளக்கம் அளித்தல், பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளில் மாணவா்களை ஈடுப்படுத்தும் போது, அவா்களின் உடல்நிலை , சூழல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து ஆசிரியா்கள் செயல்பாடுகளை கற்றுக் கொடுக்க வேண்டும் போன்றவைகளோடு யோகா குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சூரிய நமஸ்காா்:ஆசனங்கள் பல்வேறு உடல் நிலையைக் குறிக்கின்றன. அவை உடல் மனம், ஆன்மாவை ஒருங்கிணைக்கும். இதனால் ஆசனங்கள் மற்றும் மூச்சை கவனத்து உடல் மனம் பற்றிய விழிப்புணா்வை வளா்க்கவேண்டும். சூரிய நமஸ்காா் என்று அழைக்கப்படும் 12 நிலைகள் பிரணாமாசனம், ஹஸ்த உத்தாசனம் முதல் பிரணாமாசனம் வரையிலானது எனக் குறிப்பிட்டு இந்த ஆசனங்களையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், வகுப்பு வாரியாக உடற் கல்வியறிவு குறித்தவை உள்ளிட்ட தகவல்கள் உடற்கல்வி பாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.