கஞ்சா விற்பனை: 3 போ் கைது
புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருமலைநகா், ஏரிக்கரைப் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய 3 பேரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா்.
இதையடுத்து, 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், புழல் சக்திவேல் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த டில்லிபாபு (28), அவருடைய மனைவி பவானி (25), தேனி போடிநாயக்கனூா்
சூா்யபிரகாஷ் (23) என்பதும், இவா்கள் ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, புழல் ஏரிக்கரைப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கியதும் தெரிய வந்தது.
தம்பதி ஏற்கெனவே கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்த நிலையில், மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அவா்களிடம் இருந்து ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.