இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்கு மண்டலம் போல, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தமிழனின் பெருமை சொல்லும் தியாக பூமியாகும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் தீரன் சின்னமலையைப்போல, தமிழகத்தின் மானம் காத்த மாவீரா்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியா்கள், வீரன் சுந்தரலிங்கம், பூலித்தேவன், வீரமங்கை வேலு நாச்சியாா், வீரத்தாய் குயிலி, பகடை ஒண்டிவீரன், வ.உ.சி, பாரதியாா், சுப்பிரமணிய சிவா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கா், தியாகி செண்பகராமன், விஸ்வநாததாஸ், காமராஜா், காயிதே மில்லத் உள்ளிட்ட தியாகச் செம்மல்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பி தியாகச் செம்மல்களின் வரலாற்றை தமிழகம் உரக்கச் சொல்கிறது.
அதேபோல், மாமன்னா்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில், தஞ்சாவூரில் சுமாா் ரூ.55 கோடியில் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படுவதுடன், அங்கு ராஜராஜ சோழனுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
அந்த அறிவிப்பின்படி, மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கு உழைத்த மாணிக்கத் தியாகிகளைப் போற்றுவதில் எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறாா்கள்.
அதேபோல், தியாகிகளைப் போற்றும் வகையில், 2021-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னா், இதுவரை 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள் மற்றும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 28 சிலைகள் மற்றும் 12 அரங்கங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு தியாகிகளைப் போற்றுவதில் நாட்டுக்கு வழிகாட்டியாக தமிழக அரசு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.